Talk: மதராஸ் மனதே – தலை கொடுத்தேனும் தலைநகர் காப்போம்” எல்லை மீட்பு போராட்டம் – Aug. 21, 2020

By முனைவர் T. பரமேசுவரி

Online. Facebook Live: http://www.facebook.com/QIAMSMEDIA/ 
At 7.00 p.m.

Organised by Quaide Milleth International Academy of Media Studies & Foundation for South Indian Studies

இந்திய சுதந்திரத்துக்கு முன்பே மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை எழத் தொடங்கி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மன்னரும் மக்களும் இணைந்து கோரிக்கை வைத்ததால், 1936 ஏப்ரல் 1 அன்று இந்திய நிர்வாகச் சட்டத்தின் கீழ், அதிகாரப்பூர்வமாக ஒரியா மொழி பேசும் மக்களுக்காக, இந்திய வரலாற்றில் மொழிவழி மாநிலமாக முதலில் உதயமானது ஒரிசா (தற்போதை ஒடிசா). விடுதலைக்குப் பின் இக்கோரிக்கை பரவலாகவும் வலுவாகவும் எழுந்ததன் அடிப்படையில் அது குறித்து ஆராய மத்திய அரசால் 1948 இல் எஸ்.கே. தார் என்பவர் தலைமையில் ஓர் ஆணையம் (Dhar commission) அமைக்கப்பட்டது.

இச்சூழலில் தனி ஆந்திர கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு, 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து 1952 டிசம்பர் 15 அன்று உயிர் நீத்தார். இதனால் கொந்தளிப்பான சூழல் உருவானது. இந்நிலையில், 1953 அக்டோபர் 1ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரம் அறிவிக்கப்பட்டது. உடனே ஆந்திரத்தின் தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி “மதராஸ் மனதே” என்ற போராட்டத்தை ஆந்திரத் தலைவர்கள் மேற்கொண்டனர். அப்போது சிலம்புச் செல்வர் ம.பொ.சி “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, சென்னையை தமிழகத்தில் தக்கவைக்க போராடினார். தமிழகம் சென்னையை தக்கவைத்துக் கொண்டாலும், போராட்டம் முடிந்துவிடவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்க வேண்டிய இக்கட்டான சூழல். இது குறித்து உரையாடுகிறார் முனைவர் T. பரமேசுவரி.

முனைவர் தி. பரமேசுவரி: சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் பெயர்த்தி; தமிழாசிரியர், இலக்கியவாதி, பெண்ணியவாதி என்ற பல அடையாளங்களுக்கு சொந்தக்காரர். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கின்றார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர்.